லவ்லி சோல்ஜர் அணியை64 ரன்னுக்குள் சுருட்டிய காஸ்மோ-ஏ


லவ்லி சோல்ஜர் அணியை64 ரன்னுக்குள் சுருட்டிய காஸ்மோ-ஏ
x

கடலூரில் நடக்கும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் லவ்லி சோல்ஜர் அணியை 64 ரன்னுக்குள் சுருட்டி காஸ்மோ-ஏ அணி அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் என்.எஸ்.கே. அணியை விக்டோரியா அணி போராடி வென்றது.

கடலூர்

கடலூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 8 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று காலை நடந்த போட்டியில் காஸ்மோ ஏ-லவ்லி சோல்ஜர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற காஸ்மோ ஏ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பான்சிங் அதிரடியாக விளையாடி 72 ரன்கள் விளாசினார். மேலும் அந்த அணி வீரர்கள் ஸ்ரீதர் 35 ரன்களும், பாஸ்கர் 26 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் காஸ்மோ ஏ அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லவ்லி சோல்ஜர் அணி விளையாடியது. இதில் காஸ்மோ ஏ அணி வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் லவ்லி சோல்ஜர் அணி வீரர்கள் அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். முடிவில் அந்த அணி 15 ஓவர்களில் 64 ரன்களுக்குள், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் காஸ்மோ ஏ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி பவுலர் கதிரவன் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார்.

5 விக்கெட் சாய்த்த வீரர்

இதையடுத்து மதியம் நடந்த மற்றொரு ஆட்டத்தில் என்.எஸ்.கே- விக்டோரியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த என்.எஸ்.கே. அணி, விக்டோரியா அணி வீரர்களின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 17 ஓவர்களில் 84 ரன்களுக்குள் ஆல் ஆவுட் ஆனது. விக்டோரியா பவுலர் கலைசெல்வன் 4 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த விக்டோரியா அணியும், என்.எஸ்.கே. பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் 14 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்து போராடி வென்றது.


Next Story