பருத்திக்கு நிலையான விலை கிடைக்குமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு


தினத்தந்தி 7 Feb 2023 12:30 AM IST (Updated: 7 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பருத்திக்கு நிலையான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பருத்தி

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. பின்னர் சாகுபடி செய்யப்படும் பருத்தி மூட்டைகள் அனைத்தையும் விவசாயிகள் ராசிபுரம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் நடைபெறும் ஏலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

அங்கு சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தி மூட்டைகளை ஏலத்தில் எடுத்து வருகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை காரணமாக பருத்தி விளைச்சல் கடுமையாக குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விலை குறைந்தது

மேலும் கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்போது ஒரு கிலோ பருத்தி ரூ.70 முதல் 80 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் கூறினர். ஆட்கள் பற்றாக்குறை மற்றும் உர விலை உயர்வால் பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் பருத்தி விவசாயம் முற்றிலும் இல்லாமல் போகும் நிலை உருவாகும் என விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.

இதுகுறித்து பருத்தி விவசாயிகள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பதுக்கல்

அம்மாபாளையம் புதூர் பருத்தி விவசாயி முருகேஷ்:-

கடந்த ஆண்டு ஒரு ஏக்கரில் 600 கிலோ பருத்தி வரை கிடைத்தது. இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக பருத்தி பயிர்கள் சேதமடைந்ததால் 200 கிலோ பருத்தி மட்டுமே கிடைத்தது. மேலும் கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்திக்கு ரூ.130 வரை கிடைத்தது. தற்போது ரூ.70 முதல் 80 வரை மட்டுமே விற்பனை ஆகிறது.

பருத்தி விளைச்சல் அதிகமாக இருக்கும்போது வியாபாரிகள் மறைமுக ஒப்பந்தம் போட்டு கொண்டு விலையை குறைத்து விடுகின்றனர். அப்போது குறைந்த விலைக்கு பருத்தி மூட்டைகளை வாங்கி பதுக்கி வைத்து கொண்டு, விலை அதிகமாகும் போது விற்பனை செய்கின்றனர். அதன் காரணமாக பருத்தி விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

ஆட்கள் பற்றாக்குறை

ஆனால் உண்மை நிலை அதுவல்ல. ஏற்கனவே 100 நாட்கள் வேலைக்கு ஆட்கள் சென்று விடுவதால் விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் ஆட்கள் கூலியும் அதிகரித்துவிட்டது. இதன் எதிரொலியாக நினைத்த அளவுக்கு பருத்தி பயிரிட முடியவில்லை. இதேநிலை நீடித்தால் 5 அல்லது 6 ஆண்டுகளில் விவசாயமே இல்லாத நிலை உருவாகும்.

எனவே சூழலை கருத்தில் கொண்டு விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் மறைமுக ஒப்பந்தத்தில் ஈடுபட்டு பருத்திக்கு விலை நிர்ணயம் செய்வதை தடுக்கும் வகையில் பருத்திக்கு நிலையான விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உர விலை உயர்வு

புதுச்சத்திரம் ஒன்றியம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த விவசாயி ரத்தினவேல்:-

பருவமழையால் கடந்த ஆண்டுவிட இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் கடுமையாக குறைந்துவிட்டது. மேலும் உரவிலை அதிகரித்துவிட்டது. இதனால் விவசாயிகள் பருத்தியை பயிரிட தயங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் விவசாயத்திற்கான ஆட்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடைசியாக ஒரு கிலோ பருத்தியை பறிக்க ரூ.40 வரை கூலி கேட்கின்றனர்.

எனவே பருத்தி விவசாயத்தை காக்கும் வகையில் அரசு உர விலையை கட்டுப்பாட்டில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலையால் பாதிக்கப்படும் பருத்தி பயிர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் பருத்தி ஏற்றுமதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தால் பருத்தி விவசாயம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story