எடப்பாடியில் ரூ.95 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
எடப்பாடியில் ரூ.95 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த வெள்ளரி வெள்ளி பகுதியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சமீபத்தில் பருத்தி விற்பனைக்கான பொது ஏலம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 13 ஆயிரம் குவிண்டால் எடையுள்ள, 3 ஆயிரத்து 355 பருத்தி மூட்டைகள் ரூ.95 லட்சத்திற்கு விற்பனையானது. பொது ஏலத்தில் விற்பனைக்கு வந்த பருத்திகள் குறைந்தபட்சமாக குவிண்டால் ஒன்று (100 கிலோ) ரூ.6 ஆயிரத்து 899 முதல் ரூ.7 ஆயிரத்து 599 வரை விற்பனையானது. அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வரும் இந்த மையத்தில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் பருத்தி மூட்டைகளுக்கு, கையாளும் கட்டணம், சேவை கட்டணம் உள்ளிட்ட மறைமுக கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.