பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம்


பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 24 April 2023 12:45 AM IST (Updated: 24 April 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை

சீர்காழி பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பருத்தி சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், கொண்டல், மங்கைமடம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பருத்தியில் களை வெட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சீர்காழி வட்டாரத்துக்கு உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நெல், உளுந்து, கடலை சாகுபடியில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்த நிலையில், விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி ஓரளவிற்கு லாபத்தை ஈட்டி தந்தது. இதனால் கோடையில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

தண்ணீர் தேவை குறைவு

இதனிடையே கடந்த ஆண்டு பருத்தி விலை கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டதால் அதிக லாபம் கிடைத்தது. குறிப்பாக பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது. மேலும் கடற்கரையை ஒட்டி உள்ள நிலங்களில் பருத்தி நன்றாக விளையக்கூடியது.

அதன் காரணமாகவே விவசாயிகள் பருத்தி சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இதுவரை பூச்சி தாக்குதல் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

நல்ல வரவேற்பு

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் விலை கிடைக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. ஏனென்றால் உலக அளவில் இந்தியாவில் விளையக்கூடிய பருத்திக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது. பருத்தி சாகுபடி செய்யும்போது திடீரென கனமழை பெய்தால் பருத்தி காய்கள் கொட்டிவிடும். பருத்தி சாகுபடியிலும் சில இடர்பாடுகள் இருப்பதால் பருத்தி சாகுபடிக்கு காப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story