பருத்தி அறுவடை பணிகள் தீவிரம்


பருத்தி அறுவடை பணிகள் தீவிரம்
x

ராஜபாளையம் அருகே பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறைவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறைவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

பருத்தி சாகுபடி

ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரம், சுந்தரராஜபுரம் பகுதிகளில் மா, தென்னைக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. அதாவது இங்கு 100 ஏக்கர் வரை பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போதுமான தண்ணீர் வசதி இருந்ததால் 3 மாத பயிரான பருத்தி தற்போது நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை தாக்கம் காரணமாக பருத்தி செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டாலும், காய்கள் வெடித்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

அறுவடைக்கு தயார்

இதுகுறித்து விவசாயிகள் பாலா ராஜா, ஜெயராம் ஆகியோர் கூறியதாவது:-

ராஜபாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தியானது தற்போது அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளது. இந்தநிலையில் ஆள் பற்றாக்குறை காரணமாக பருத்தியை அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த பகுதியில் வசிக்கும் விவசாய பணியாளர்கள் அனைவரும் மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு சென்று விடுவதால், விவசாய அறுவடை பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்கள் பற்றாக்குறைவினால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ஆதலால் சேத்தூர் அல்லது சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அறுவடைக்கு ஆட்களை அழைத்து வரும் நிலை உள்ளது. இவர்களை அழைத்து வந்து, திரும்ப சொந்த ஊருக்கு கொண்டு சென்று விடுவதில் குறிப்பிட்ட தொகை போக்குவரத்திற்கு செலவாகிறது.

ஆட்கள் பற்றாக்குறை

கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வருடம் விலை பாதிக்கு கீழ் குறைந்து விட்டது. திடீரென உயர்ந்த நூல் விலை காரணமாக பல்வேறு ஆலைகள் உற்பத்தியை குறைத்து விட்டதாலும், பல ஆலைகள் மூடப்பட்டதாலும் தற்போது பருத்தியை வாங்க ஆள் இல்லாத நிலை உருவாகி உள்ளது.

இந்தநிலையில் நடுகை, பராமரிப்பு, அறுவடை கூலியுடன், போக்குவரத்து செலவும் சேர்ந்ததால் பருத்தி விற்பனை விலை கட்டுப்படி ஆகவில்லை.

ஆட்கள் பற்றாக்குறைவினால் பருத்தி சாகுபடி செய்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். ஆதலால் இதுகுறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story