கள்ளக்குறிச்சியில் பருத்தி சந்தை தொடக்கம் விவசாயிகள் பயன்பெற அதிகாரி வேண்டுகோள்


கள்ளக்குறிச்சியில் பருத்தி சந்தை தொடக்கம்  விவசாயிகள் பயன்பெற அதிகாரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி சந்தை தொடங்கியது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை புதன்கிழமைகளில் பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம்.

இதில் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி, கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகள் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் நேற்று முதல் பருத்தி சந்தை தொடங்கியது. நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட 102 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி, கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

ரூ.6½ லட்சத்திற்கு விற்பனை

இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 58-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 889-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 18-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 210-க்கும் விற்பனையானது.

நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்திற்கு பருத்தி விற்பனையானது. இந்த பருத்தி சந்தை ஜூன் மாதம் வரை வாரந்தோறும் புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், மாவட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெறலாம் என கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் கூறியுள்ளார்.


Next Story