பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சி தாக்குதலால் மகசூல் குறைவு


பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சி தாக்குதலால் மகசூல் குறைவு
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் பகுதியில் பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சி தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளது. இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் பகுதியில் பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சி தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளது. இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருத்தி சாகுபடி

செம்பனார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட திருக்கடையூர், ஆக்கூர், காலகஸ்தி நாதபுரம், டீ.மணல்மேடு, நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவலூர், கண்ணங்குடி, கிள்ளியூர், மாத்தூர், அன்னப்பன்பேட்டை, பிள்ளை பெருமாநல்லூர், வளையல் சோழகன், கிடங்கல், மாமாகுடி, காலம நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பருத்தியின் விலை அதிகரித்து இருந்ததால் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வளர்ந்து உள்ள பருத்தி செடியில் பூப்பூத்து காய் வெடிக்கும் நிலையில் உள்ளது.

மகசூல் குறைவு

இந்த நிலையில் தற்போது பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சிகள், பருத்தி காய் புழுக்கள், அசுவினி பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் பருத்தியில் அதிக அளவில் சப்பை கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் மகசூல் குறைந்துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு பருத்தி மகசூல் அதிகமாக இருக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பூச்சி தாக்குதலால் பருத்தி சாகுபடிக்கு செலவு செய்த பணத்தை எடுக்க முடியுமோ? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story