3 ஆயிரம் ஏக்கர் பருத்தி பாதிப்பு
கொள்ளிடம் பகுதியில் பெய்த பலத்த மழையால் 3 ஆயிரம் ஏக்கர் பருத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனா்.
கொள்ளிடம்;
கொள்ளிடம் பகுதியில் பெய்த பலத்த மழையால் 3 ஆயிரம் ஏக்கர் பருத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனா்.
பருத்தி சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் சுமார் 3ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த வருடம் சுமார் 2ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே பருத்தி பயிர் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் இந்த வருடம் 3ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். கடந்த வருடம் பருத்தி ஒரு கிலோ ரூ.120 வரை கொள்முதல் செய்யப்பட்டதால் இந்த வருடமும் பருத்தி கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதாக நினைத்து அதிக நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
வெப்பத்தின் தாக்கம்
கடந்த 25 நாட்களாக பரவலாக பருத்தி அறுவடை செய்யப்பட்டு வாரந்தோறும் திங்கட்கிழமை எருக்கூரில் உள்ள பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு எடுத்து சென்றும் விற்பனை செய்து வருகின்றனர். சிலர் தனியார் வியாபாரிகளிடமும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வருடம் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்ததால் பருத்தி பயிர் செழிப்பாக வளர்ந்து பருத்தி பஞ்சு அறுவடை மிகவும் நல்ல முறையில் நடந்தது.
கொள்முதல் குறைவு
ஆனால் எதிர்பாராத வகையில் கடந்த 10, 11-ந் தேதிகளில்
கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும்மழை பெய்தது. இதனால் பருத்தி பயிரில் ஈரம் அதிகமானது. எனவே வெடிக்க வேண்டிய பருத்தி காய்கள் வெடிக்காமல் போனது. இதனால் பருத்தி பஞ்சு அறுவடை செய்ய முடியவில்லை. மேலும் பருத்தி பயிரில் வெடித்த நிலையில் இருந்த பஞ்சுகள் மழையில் நனைந்ததால் பஞ்சுகளும் வீணாகியது. மழையில் நனைந்த பஞ்சு நிறம் மாறி தரம் குறைந்ததால் அதன் விலை மிகவும் குறைவாகவே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.தொடர்ந்து அறுவடை செய்த பஞ்சு மூட்டைகளை எருக்கூரில் உள்ள விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் எடுத்துச் சென்று விற்பனை கூட கட்டிடத்துக்கு எதிரே அடுக்கி வைத்திருந்தனர். அப்போதும் மழை பெய்ததால் பருத்திப்பஞ்சு அங்கேயும் கணிசமாக நனைந்து விட்டது. இதனால் விவசாயிகள் அங்கு எடுத்துச் சென்று விற்பனைக்காக வைத்திருந்த 500- க்கும் மேற்பட்ட குவின்டால் பருத்தி பஞ்சும் சற்று ஈரமானதால் அதன் விலையும் சரிந்தது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் பருத்தி கொள்முதல் விலை பாதியாக குறைந்தது.
நஷ்டம்
இதுகுறித்து குன்னம் கிராமத்தை சேர்ந்த பருத்தி விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த வருடம் பருத்தி கொள்முதல் விலை அதிகமாக இருந்ததால் இந்த வருடம் அதிகமான விலைக்கு பருத்தி விற்பனை செய்யலாம் என்ற நோக்கில் கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் பருத்திப் பயிர் சாகுபடி செய்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த விலைக்கு கொள்முதல் செய்யப்படவில்லை. இருப்பினும் பருத்தி பஞ்சு அறுவடை செய்து அதை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது பெய்த மழை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.இதனால் பருத்தி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விற்பனைக்காக அறுவடை செய்து வைத்திருந்த பருத்தி பஞ்சு மூட்டைகளும் கணிசமாக நனைந்து நிறம் மாறியுள்ளதால் அதன் விலையும் குறைந்துள்ளது. இதனால் பருத்தி விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி, ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளாமல் வழக்கமான விலைக்கு பருத்தி பஞ்சை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.