சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்


சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 29 Jan 2023 3:06 AM GMT (Updated: 29 Jan 2023 3:06 AM GMT)

சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது.

நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார். இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தனர்.

அதன் பின்னர் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதல் இடைத்தேர்தலை சந்திக்கிறோம்.

இத்தேர்தலின் முடிவை தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக தமிழர்களும் பார்த்து கொண்டுள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களத்தில் இறங்கியுள்ளோம். கூட்டணி குறித்து 2,3 நாட்களில் முடிவு அறிவிக்கபடும் என கூறினார்.கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு இடைதேர்தல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இடைத்தேர்தல் பணிகளை அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை வெற்றி என்ற இலைக்கை அடைய அயராது உழைத்து வருகிறோம். வெற்றி இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் செங்கோட்டையே வியக்கதக்க அளவுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் பிரச்சாரம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும். இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என கூறினார்.




Next Story