ஊராட்சிக்குழு கூட்டத்தில் பா.ம.க. கவுன்சிலர் வெளிநடப்பு
10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க கோரி நாமக்கல்லில் ஊராட்சிக்குழு கூட்டத்தில் பா.ம.க. கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
நாமக்கல்லில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில், ராஜேந்திரன், விமலா சிவக்குமார், வடிவேலன் உள்பட 8 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரவு செலவு கணக்கு, நிலுவையில் உள்ள பணிகள், முடிக்கப்பட்ட பணிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனிடையே பா.ம.க. நிர்வாகியும், 8-வது வார்டு மாவட்ட கவுன்சிலருமான வடிவேலன், மீண்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். முன்னதாக அதை வலியுறுத்தி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவரிடம் தான் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர்கள் மறுத்து விட்டதால் வெளிநடப்பு செய்ததாகவும் வடிவேலன் தெரிவித்தார். மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கு 10.5 உதவீத உள் இட ஒதுக்கீட்டை வழங்கியதைபோல, தற்போதைய அரசு காலதாமதமின்றி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோல் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட பதாகையுடன் கவுன்சிலர் வடிவேலன் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் பங்கேற்று, பின்னர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.