கவுன்சிலர்கள் வாக்குவாதம்


கவுன்சிலர்கள் வாக்குவாதம்
x

சிவகாசியில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டம் பாதியில் முடிந்தது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டம் பாதியில் முடிந்தது.

கருத்து கேட்பு கூட்டம்

சிவகாசி மாநகராட்சியில் 48 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 3-வது, 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 24 கவுன்சிலர்களுக்கு மட்டும் பழைய நகராட்சி அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் செய்தது குறித்து விவாதிக்க இருந்தனர்.

இதில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், மண்டல தலைவர்கள் சேவுகன், சூர்யா மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

வாக்குவாதம்

கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் சிலர் தங்கள் பகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் இருக்கிறது என்று குற்றம்சாட்டினர். இதில் ஒருவரை, ஒருவர் குற்றம் சாட்டியதால் கூட்டத்தில் வாக்குவாதம் நடந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட சில கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

பெண் கவுன்சிலர்கள் சிலர் கூட்டம் நடைபெற்ற அறைக்கு வெளியே வந்து நின்று கொண்டனர். கவுன்சிலர்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் நீண்ட நேரம் தொடர்ந்தது. அதன் பின்னர் மேயர், துணைமேயர் மற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கவுன்சிலர்களை சமாதானம் செய்தனர். அதன் பின்னரும் வாக்குவாதம் தொடர்ந்ததால் கருத்துகேட்பு கூட்டம் பாதியில் முடிந்தது.

கொலை மிரட்டல்

இந்த நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் தன்னை தி.மு.க. கவுன்சிலர் வெயில்ராஜ் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார் என ம.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஷ் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து தி.மு.க. கவுன்சிலர் வெயில்ராஜியிடம் கேட்ட போது அவர், தான் யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை. கூட்டத்தில் எனது கருத்தை பதிவு செய்தேன். இதை சிலர் தவறாக நினைத்துக் கொண்டனர்.

மற்றபடி யாருடனும் எனக்கு பிரச்சினை இல்லை என்று கூறினார்.


Next Story