நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
குளச்சல் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
குளச்சல்,
குளச்சல் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் நசீர் (தி.மு.க.) தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் விஜயகுமார், மேலாளர் சக்தி குமார், துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், பொறியாளர் ஜீவா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
பனிக்குருசு (தி.மு.க.)-தமிழ்த்தாய் வாழ்த்து பாடி கூட்டம் தொடங்குவது போல், தேசியக்கீதம் பாடித் தான் கூட்டத்தை முடிக்க வேண்டும்.
(அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஜான்சன் தீர்மானங்கள் குறித்த மனு அளித்தார்)
தலைவர்:- மன்ற கூட்டத்தில் மனு வாங்கக்கூடாது. அலுவலகத்தில் வைத்து தர வேண்டும்.
ஆணையர்:-அலுவலகத்தில் தான் மனு அளிக்க வேண்டும்
ஜான்சன் - நீங்கள் மெஜாரிட்டி இல்லாமல் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றுகிறீர்கள். அப்போது கவுன்சிலர் வினீஷ் (சுயேச்சை) தலைவர் பேசுவதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
தலைவர் - செல்போன் மூலம் கூட்டத்தை படம் பிடிக்கக்கூடாது.
ரகீம் (தி.மு.க.)-அன்வர் கவுன்சிலர், சக கவுன்சிலரை மன்றத்தில் ஒருமையில் பேசுகிறார்.
இதுதொடர்பாக கவுன்சிலர்கள் அன்வர் சதாத், ஜான் பிரிட்டோ (தி.மு.க.) ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலர் ஜான் பிரிட்டோவை கவுன்சிலர்கள் ஜான்சன், வினீஷ் ஆகியோர் சமாதானம் செய்து வைத்தனர். மறு நிமிடம் மீண்டும் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் தலைவர் எழுந்த நிலையில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டமும் முடிவடைந்தது என கூறியவாறே வெளியேறினார்.