தெருவிளக்குகள் அமைக்காததை கண்டித்து வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
தெருவிளக்குகள் அமைக்காததை கண்டித்து வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை
தெருவிளக்குகள் அமைக்காததை கண்டித்து வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
வால்பாறை நகராட்சி மன்ற அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் அழகு சுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் பெர்ப்பெற்றி டிடெரன்ஸ்லியோன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பேசும்போது, ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் தெருவிளக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 மாதங்களாகியும் எந்த ஒரு வார்டு பகுதியிலும் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. என்று கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தெருவிளக்குகள் அமைக்கும் பணி
அப்போது ஒரு மாதத்தில் கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் மூன்று மாதத்திற்குள் அனைத்து வார்டு பகுதியிலும் தெருவிளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.
ஏற்கனவே பல்வேறு எஸ்டேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் தரமானதாக இல்லாத நிலையில் சாலையின் பக்கவாட்டில் சாலை விரிவுபடுத்தி போடப்படாததால் தினந்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது. முறையாக தரமான சாலை அமைக்கப்படாத ஒப்பந்ததாரர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.மயானக்கூரை அமைக்க வேண்டும். குடிதண்ணீர் தொட்டிகள் பராமரிப்பு செய்து பொது மக்களுக்கு முறையாக குடி தண்ணீர் வழங்க வேண்டும். அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
தீர்மானம் நிறைவேற்றம்
நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொண்டுவரக்கூடிய பிரச்சினைகளுக்கு நகர மன்ற தலைவர், துணை தலைவர், ஆணையாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் காலங்கடத்தும் ஒவ்வொரு வளர்ச்சி பணிக்கும் தமிழ் நாடு அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவாதம் நடைபெற்றது. வருகிற நாட்களில் அனைத்து வார்டு பகுதியிலும் வளர்ச்சி பணிகளை விரைவாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் உறுதியளித்தார். பின்னர் வால்பாறை நகரிலும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.