நகராட்சி கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணிப்பு


நகராட்சி கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
x

நகராட்சி கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகராட்சியின் 2021-22-ம் ஆண்டுக்கான நிர்வாக அறிக்கை மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில், அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் சிறப்பு திட்டத்திற்கு பெரம்பலூர் நகராட்சியில் 3-வது வார்டுக்கு உட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (வடக்கு) வளாகத்தில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் அமைக்க ரூ.23 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டது.

நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 231 தூய்மை பணியாளர்கள் பணி செய்ய ஒப்பந்த நிறுவனத்துக்கு உத்தேச செலவினமாக ரூ.1 கோடி 60 லட்சம் ஆகும் என்று தீர்மானிக்கப்பட்டு, அந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு வேலை வழங்க தீர்மானிக்கப்பட்டது. 17-வது வார்டு ஏ.வி.ஆர். நகர் 1, 2-வது குறுக்கு தெருக்களிலும், 10-வது வார்டு ராஜா நகர் பகுதியிலும் பாதாள சாக்கடை குழாய் வசதி அமைக்கும் பணிக்கு தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வேலைகளுக்கு நிதி மதிப்பீடு செய்யப்பட்டு கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள குறைகளை நகர்மன்ற தலைவரிடம் முறையிட்டு பேசினர்.

நகராட்சியில் மொத்தம் உள்ள 21 கவுன்சிலர்களில் தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் ஒருவர், சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 9 பேர் நகராட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதில் சிலர், தங்கள் வார்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் மறுத்து வருவதாக கூறி, கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.


Next Story