ஊராட்சிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை-ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் புகார்

ஊராட்சிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்று வடக்கு ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
ஊராட்சிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்று வடக்கு ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
சமையல் அறை கட்டிடம் புதுப்பித்தல்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் விஜயராணி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 15-வது நிதிக்குழு மானியம் மூலம் புரவிபாளையம், கள்ளிப்பட்டி உள்பட 23 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சமையல் அறை கட்டிடம் பழுது பார்த்தல் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தல் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் துறை தொடர்பான அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்கள். கூட்டத்தில் ஆணையாளர் முத்துமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆனந்த் மற்றும் அதிகாரிகள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-
அதிகாரிகள் வருவதில்லை
பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் கள்ளிப்பட்டி பிரிவில் இருந்த பழைய பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டு உள்ளது. அங்கு புதிதாக மீண்டும் நிழற்குடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. இதுகுறித்து கேட்டாலும் அதிகாரிகள் சரியான பதில் கூறுவதில்லை. மேலும் கூட்டத்திற்கு மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் வருவதில்லை. இதனால் பொதுமக்களின் பிரச்சினைகளை கூட்டத்தில் எடுத்து கூறியும் தீர்க்க முடியவில்லை. எனவே கூட்டத்திற்கு வராத துறை அதிகாரிகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






