வாயில் கருப்புத்துணி கட்டி கவுன்சிலர்கள் தர்ணா


வாயில் கருப்புத்துணி கட்டி கவுன்சிலர்கள் தர்ணா
x

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாயில் கருப்புத்துணி கட்டி கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சுயேச்சை கவுன்சிலர்கள் கணேசன், ராஜதுரை ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாலமுருகன், சுதந்திரதேவி, விஜி, தி.மு.க. கவுன்சிலர் ரூபி சகிலா ஆகியோர் வந்தனர். திடீரென இவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாயில் கருப்புத்துணியை கட்டி தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், 14 அரசு பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்ததாக கூறி இடித்த அதிகாரிகளை கண்டித்து இந்த தர்ணா நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள், தலையில் முக்காடு போட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தனர்.

அப்போது, திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி நேரில் வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என கவுன்சிலர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ரெங்கநாதன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story