மேட்டூா் நகராட்சி கூட்டத்தில்தலைவருடன், கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்


மேட்டூா் நகராட்சி கூட்டத்தில்தலைவருடன், கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
x

மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

மேட்டூர்,

நகராட்சி கூட்டம்

மேட்டூர் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க.வை சேர்ந்த நகராட்சி தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியவுடன் மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டது.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து டிசம்பர் மாதம் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் குடிநீர் தேவை குறித்து விரிவான அறிக்கை தயார் செய்ய ஒரு தனியார் நிறுவனத்திற்கு பணி வழங்கிய தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்தோம். அந்த தீர்மானத்தை எப்படி நிறைவேற்றினீர்கள் என்று நகராட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

செவிசாய்க்கவில்லை

இதற்கு பதில் அளித்த தலைவர் சந்திரா, மக்கள் தேவைக்காக இந்த பணி நடைபெற்றது என்றார். ஆனால் இந்த பதிலை கவுன்சிலர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளாமல் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கவுன்சிலர் மாரியம்மாள் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) பேசும் போது, மேட்டூர் நகராட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்ப வீட்டுக்கு செல்வது மட்டுமே நடைபெறுகிறது. மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கை எதற்கும் நகராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்று பேசினார்.

இதேபோல், தி.மு.க. கவுன்சிலர்கள் வெங்கடாசலம், சாந்தி, கீதா பாலு, இளங்கோ, ரங்கசாமி, இளம்பருதி ஆகியோரும் தங்கள் வார்டு குறைகளை தலைவரிடம் முறையிட்டு காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

கடும் வாக்குவாதம்

பின்னர் விவாதங்கள் முடிந்து கவுன்சிலர்கள் அனைவரும் கூட்ட அரங்கை விட்டு வெளியேற முற்பட்டனர். அப்போது நகராட்சி தலைவர் சந்திரா, கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் அனைவரும் நகராட்சி தலைவர் சந்திராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கவுன்சிலர்கள் தலைவரிடம் கூறியதாவது:-

நாங்கள் இந்த கூட்டத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. மன்றத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி வருகிறோம். நீங்கள் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறுகிறீர்கள். இதற்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

இவ்வாறு ஆக்ரோஷமாக கூறிய கவுன்சிலர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு நகராட்சி தலைவர் சந்திரா, மன்ற கூட்ட அரங்கை விட்டு அவரது அறைக்கு சென்றார்.

கவுன்சிலர்கள் மனு

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட 24 கவுன்சிலர்களும் ஒன்று சேர்ந்து நகராட்சி ஆணையாளர் அண்ணாமலையை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், கடந்த டிசம்பர் மாதம் நடந்த நகராட்சி கூட்டத்தில் குடிநீர் திட்டத்துக்கு விரிவான அறிக்கை தயார் செய்ய வைக்கப்பட்டிருந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும், இன்று(நேற்று) நடந்த கூட்டத்தை புறக்கணித்து உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.


Next Story