கவுன்சிலர்கள் 'திடீர்' உள்ளிருப்பு போராட்டம்


கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
x

குழித்துறை நகராட்சி கூட்டத்தில் மார்த்தாண்டம் சந்தையில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

குழித்துறை,

குழித்துறை நகராட்சி கூட்டத்தில் மார்த்தாண்டம் சந்தையில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி கூட்டம்

குழித்துறை நகராட்சி கூட்டம் அதன் தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஆணையர் ராம திலகம், என்ஜினீயர் பேரின்பம், சுகாதார அதிகாரி ஸ்டான்லி குமார், ஆய்வாளர் குருசாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரெத்தினமணி பேசும்போது நகராட்சி பகுதியில் வீட்டு கழிவு நீர் குழாய்களை அடைக்கும் போது கள நிலவரத்தை கணக்கில் எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து ரீகன், ஆட்லின் கெனில் ஆகியோர் பேசும் போது, ஏழைகளின் சிறிய வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களை அடைக்கும் பணியை நிறுத்திவிட்டு பெரிய வணிக வளாகங்கள், ஓட்டல்கள், பெரிய வீடுகள் போன்றவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்களை அடைக்க வேண்டும், என்றனர்.

இதேகோரிக்கையை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பியும் வலியுறுத்தினார். இதற்கு ஆணையர் ராமதிலகம் பதில் அளித்த போது, கவுன்சிலர்களின் கோரிக்கைபடி, பெரிய வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் போன்றவற்றின் கழிவுநீர் குழாய்களை அடைத்து விட்டு, இறுதியில் சிறிய வீட்டு கழிவுநீர் குழாய்களை அடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

சந்தையில் குப்பை கிடங்கு

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சார்தார்ஷா பேசும்போது, நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகள் மார்த்தாண்டம் காய்கறி சந்தையின் அருகில் உள்ள மீன்சந்தை பகுதியில் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அதை அப்புறப்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதை அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்தால்தான் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறுவேன். இல்லையேல் உள்ளிரு போராட்டம் மேற்கொள்ளப்படும், என்றார்.

அப்போது குப்பை கிடங்கை மாற்ற பல முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஆணையர் ராமதிலகமும், சுகாதார அதிகாரி ஸ்டான்லி குமாரும் தெரிவித்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

ஆனால் அதை கவுன்சிலர்கள் ஏற்கவில்லை. இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உரிய பதில் வரும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கவுன்சிலர் சர்தார்ஷா அறிவித்தார். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஜலீலா ராணி, விஜயலட்சுமி, ஜூலியட் மெர்லின் ரூத், லலிதா, காங்கிரசை சேர்ந்த ரீகன், ஆட்லின் கெனில், ரோஸ்லெட், தி.மு.க.வை சேர்ந்த பெர்லின் தீபா, ஷாலினி சுஜா என மொத்தம் 10 கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story