ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஆத்தூர்
ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நகராட்சி கூட்டம்
ஆத்தூர் நகராட்சி கூட்டம் தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க.கவுன்சிலர் உமாசங்கரி மோகன் முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிலை வைக்க அனுமதியா?, சிலை நகராட்சி நிதியில் இருந்து வைக்க அனுமதியா? என்று கேட்டார்.
அதற்கு தலைவர் சிலை வைக்க இடம் கேட்டு தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பின்னர் இது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினார். காங்கிரஸ் கவுன்சிலர் தேவேந்திரன் நகராட்சிக்கு வளர்ச்சிப்பணிகள் செய்ய வரும் நிதி திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இதை கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன் என கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கவுன்சிலர்கள் ெவளிநடப்பு
அ.தி.மு.க. கவுன்சிலர் உமாசங்கரி மோகன் ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள மயானத்தில் இனிமேல் இடம் பற்றாக்குறை காரணமாக பிணங்கள் யாரும் புதைக்க கூடாது என தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சடலங்களை எரிக்கவும், புதைக்கவும் சம்பிரதாயங்கள் உள்ளன. அதை மீறி இது போன்ற தீர்மானங்கள் கொண்டுவரக் கூடாது எனக்கூறி அவரது தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜேஷ்குமார், மணி, கிருஷ்ணவேணி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
இந்திய ஜனநாயக கட்சி கவுன்சிலர் வரதராஜன், எனது வார்டு நகரின் மையப்பகுதியில் உள்ளது. எனது வார்டுக்கு அடிப்படை வசதிகள் நடைபெறவில்லை என்று கூறினார். இதுகுறித்து ஆய்வு செய்து உடன் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று தலைவர் தெரிவித்தார். தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதாந்திர கூட்டத்தில் வழங்கப்படும் தொகையை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட 61 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் கவிதா ஸ்ரீராம் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.