நகராட்சி கூட்டத்தை புறக்கணித்து தனியாக ஆலோசனை நடத்திய கவுன்சிலர்கள்
நகராட்சி கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர், பா.ம.க. கவுன்சிலர்கள் 4 ேபர், தி.மு.க. கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் 2 பேர், ம.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் மற்றும் சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 21 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமதி சிவகுமாரும், துணை தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கருணாநிதியும் உள்ளனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தை நேற்று காலை 11 மணிக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, அனைத்து கவுன்சிலர்களுக்கும் நகராட்சி சார்பில் தீர்மான நகல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்திற்கு அதிகாரிகள் ஆயத்தமான நிலையில் இருந்தனர். நகராட்சி தலைவர் அவரது அறையில் இருந்தார்.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலரை தவிர மற்ற அனைத்து கவுன்சிலர்களும் நகராட்சி கூட்டத்தை புறக்கணித்து ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அங்கு நகராட்சி துணை தலைவர் வந்து, கூட்டம் நடத்தப்படுவதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். கூட்டம் முடிந்து வந்த கவுன்சிலர்களிடம் கேட்டபோது, அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். மாற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். எனவே நகராட்சி கூட்டத்தை புறக்கணித்து, மாற்று தேதியில் கூட்டம் நடத்த வேண்டும் என்று நகராட்சி அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளோம், என்றனர். இதற்கிடையே நகராட்சி கூட்டம் நடைபெற இருந்த ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.