முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்..!
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
சென்னை,
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது.
எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ மற்றும் எம்.டி.எஸ். படிப்புகளுக்கான 2023-2024-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான மாநில கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி நிறைவடைந்தது.
பரிசீலனைக்குப் பின்னா், எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 7,526 விண்ணப்பங்கள், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எம்.டி.எஸ். படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 661 விண்ணப்பங்கள், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 336 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு மக்கள் நல்வாழ்வுத்துறை https://mcc.nic.in என்ற இணையதளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது.