நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா: தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை


நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா: தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை
x

சென்னை, அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் 'இல்லந்தோறும் மூவர்ணம்' பிரசாரத்துக்காக பொதுமக்களுக்கு தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டது.

இல்லந்தோறும் மூவர்ணம் பிரசாரத்துக்கான தேசியக் கொடிகளை நாடு முழுவதும் தபால் அலுவலகங்களில் ரூ.25-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை,

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் சுதந்திர திருநாள் அமுதப் பெரு விழாவின் ஒரு பகுதியாக இந்திய திருநாட்டின் மூவர்ண தேசிய கொடியை வீட்டுக்கு கொண்டுவரவும், மக்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு இல்லந்தோறும் மூவர்ணம் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது.

இதற்கு தேவையான கொடிகள் மக்களுக்கு கிடைக்கும் வகையிலும், அதனை அவர்கள் எளிதாக சென்று வாங்கும் வகையிலும் சில ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, மத்திய அரசின் தபால் அலுவலகங்களில் நாட்டின் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கான பணியை தபால் அலுவலகங்களுக்கு மத்திய அரசு வழங்கியதில் இருந்து பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

அந்த வகையில் சென்னை நகர மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில் தேசிய கொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. தபால் அலுவலகங்கள் இந்த கொடியை ரூ.25 என்ற விலையில் மக்களுக்கு விற்பனை செய்கிறது. இதன் அளவு 30 அங்குலம்*20 அங்குலம் ஆகும். சென்னை மண்டலத்தில் உள்ள 20 தலைமை தபால் அலுவலகங்கள், 545 துணை தபால் அலுவலகங்கள், 1,626 கிளை தபால் அலுவலகங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 191 தபால் அலுவலகங்களிலும் இந்த கொடி விற்பனைக்கு இருக்கிறது.

கொடிகளை சில்லரையாகவோ அல்லது மொத்தமாகவோ வாங்க பொது மக்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும், மேலும் www.epostoffice.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் ஆன்லைன் வாயிலாக பெறலாம் என்றும் சென்னை நகர மண்டல தபால் துறை தலைவர் நடராஜன் தெரிவித்தார்.


Next Story