மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை முயற்சி


மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை வடவள்ளி அருகே மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்

வடவள்ளி

கோவை வடவள்ளி அருகே மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கல்லூரி மாணவர் சாவு

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). இவருடைய மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றார்.

பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் காரில் வீட்டிற்கு திருப்பினார். இவர்கள் வந்த கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவிகிருஷ்ணா உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தம்பதி விஷம் குடித்தனர்

இந்த நிலையில் தங்களது ஒரே மகன் இறந்ததால் சஞ்சீவ் சங்கர், நந்தினி மிகுந்த மனமுடைந்து காணப்பட்டனர். துக்கத்தில் இருந்த அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் துக்கம் தாங்க முடியாததால் சங்சீவ் சங்கர்-நந்தினி தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதன்படி நேற்று வீட்டில் இருந்த 2 பேரும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தனர்.

இதற்கிடையில் நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் நந்தினி வீட்டிற்கு விரைந்து வந்தார். அப்போது நந்தினியும், சஞ்சீவ் சங்கரும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

தீவிர சிகிச்சை

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Next Story