ஆரணி அருகே குடும்ப தகராறில் தம்பதி தற்கொலை


ஆரணி அருகே குடும்ப தகராறில் தம்பதி தற்கொலை
x

ஆரணி அருகே குடும்ப பிரச்சினையால் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். சோகத்தில் கணவரும் விஷத்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே குடும்ப பிரச்சினையால் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். சோகத்தில் கணவரும் விஷத்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

குடும்ப தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 45), விவசாயியான இவர் கிராமத்தில் பயிர் சாகுபடி செய்து வந்தார். ஆரணி பெரிய கடைத்தெருவில் தங்க நகை அடகு வியாபாரமும் செய்து வந்தார். இவருடைய மனைவி மரகதம் (43). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (22), கோபி (17) என்ற பிள்ளைகள் உள்ளனர்.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினையில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கிடைய மீண்டும் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த மரகதம் காலை 10 மணியளவில் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

விஷத்தை குடித்தார்

தகவல் அறிந்த ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று விவசாயக் கிணற்றில் இறங்கி தேடி மரகதத்தின் உடலை மீட்டனர். இதற்கிடையே மனைவி மரகதம் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்த கணவர் குமார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார்.

பின்னர் விவசாயக் கிணற்றில் இருந்து நேராக வீட்டுக்கு ஓடிச்சென்ற குமார் பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். இதைக் கண்ட கிராம மக்கள் குமாரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிராம மக்கள் சோகம்

இதுபற்றி தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மரகதத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதிர்ச்சியில் கணவரும் விஷத்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆரணி தாசில்தார் க.பெருமாள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story