விஷம் குடித்து தம்பதி தற்கொலை


விஷம் குடித்து தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2022 7:13 PM GMT (Updated: 3 Dec 2022 7:36 PM GMT)

விருதுநகரில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

விருதுநகர்


விருதுநகரில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

பெயிண்ட் வியாபாரி

விருதுநகர் எஸ்.வி.பி.என்.எஸ். தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயராஜா (வயது 41). பெயிண்ட் வியாபாரி. இவரது மனைவி அருணா மகாஸ்ரீ(37). கடந்த 2002-ல் திருமணம் நடந்த இவர்களுக்கு அட்சயாஸ்ரீ, மேகாஸ்ரீ என்ற 2 மகள்கள் உள்ளனர். அட்சயா ஸ்ரீ சென்னையில் பிளஸ்-2 படித்து வருகிறார். மேகாஸ்ரீ விருதுநகரில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு மேகாஸ்ரீ அருகில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். கார்த்திகேய ராஜாவும், அருணா மகாஸ்ரீ மட்டும் வீட்டில் இருந்தனர். பாட்டி வீட்டுக்கு சென்ற மேகா ஸ்ரீ காலையில் வீட்டிற்கு வந்தபோது வீடு கதவு பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் திறக்காத நிலையில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார்.

விஷம் குடித்து தற்ெகாலை

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திறந்து பார்த்தபோது வீட்டில் குளியலறை அருகே கார்த்திகேய ராஜாவும், அருணா மகா ஸ்ரீயும் இறந்து கிடந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மேகா ஸ்ரீ இதுபற்றி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் கார்த்திகேய ராஜா, தனது மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கடிதம் சிக்கியது

இதனை தொடர்ந்து போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் அருணா மகாஸ்ரீ தனது தாயாருக்கும், குழந்தைகளுக்கும் மற்றும் போலீசாருக்கும் 3 கடிதங்கள் உருக்கமாக எழுதி வைத்தது சிக்கியது. இதில் போலீசாருக்கு எழுதிய கடிதத்தில் முத்து மகாராஜா என்பவர் ரூ.5 லட்சம் கடன் தருவதாக முன்பணம் பெற்று சென்றார். அவர் கடன் தராமலும் முன்பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி விட்டார். முத்து மகாராஜா காஞ்சீபுரம், தேனி ஆகிய இடங்களில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கார்த்திகேய ராஜா பங்குச்சந்தையில் ஈடுபட்டிருந்ததாகவும், வேறு பல தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இதுபற்றி அருணா மகா ஸ்ரீயின் சகோதரி விருதுநகர் 17-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ரம்யா, விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் கார்த்திகேயராஜா, தனது மனைவியுடன் பல தொழில்கள் செய்து வந்ததாகவும் அதில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story