ரெயிலில் அடிபட்டு தம்பதி பலி
ரெயிலில் அடிபட்டு தம்பதி பலி
பீளமேடு
கோவையில் ரெயிலில் அடிபட்டு தம்பதி பலியானார்கள். அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் தம்பதி
கோவை கணபதி நல்லாம்பாளையம் ரங்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44) கார் டிரைவர். இவரது மனைவி லதா (43). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஸ்ரீஜா (21), ஜீவஸ்ரீ (18) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் மணிகண்டன், லதா இருவரும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் அவரது மனைவி லதாவுடன் பீளமேடு-வடகோவை ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை-கோவை இன்டர்சிட்டி ரெயில் மணிகண்டன், லதா ஆகியோர் மீது மோதியது.
போலீஸ் விசாரணை
இதில் உடல் நசுங்கி கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் இதுகுறித்து உடனடியாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த மணிகண்டன் அவரது மனைவி லதா ஆகியோரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.