முதியவரை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை விருத்தாசலம் கோர்ட்டில் தீர்ப்பு


முதியவரை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை  விருத்தாசலம் கோர்ட்டில் தீர்ப்பு
x

விருத்தாசலம் அருகே முதியவரை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தே.பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 60). இவருடைய வீட்டிற்கும், இவரது குடும்பத்திற்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராமன் மகன் கனகராஜ் (44) குடும்பத்திற்கும் இடையே குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 14-3-2020 அன்று இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கனகராஜ், அவரது மனைவி தனசெல்வி என்ற செல்வி (34), ஆகியோர் தாமரைச்செல்வனை, ஆபாசமாக திட்டி தாக்கி கொலை செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜ், செல்வி ஆகிய 2 பேரை கைது செய்து, விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் 3-ல் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பு கூறினார், அதில் கனகராஜ், அவரது மனைவி செல்வி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயகுமார் ஆஜரானார். முதியவரை அடித்து கொன்ற வழக்கில் தம்பதியருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story