வாரிசு சான்றிதழ் கேட்டு தம்பதி போராட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு வாரிசு சான்றிதழ் கேட்டு தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு வாரிசு சான்றிதழ் கேட்டு தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 61). இவர் தனது தந்தை சுந்தர தேவருக்கான வாரிசு சான்றிதழ் கேட்டு காரியாபட்டி தாசில்தாருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் நேற்று தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை சமரசப்படுத்தி அழைத்து சென்றனர்.
வீரபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த கலையரசன் என்பவர் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை முறையாக செயல்படவில்லை. ஆதலால் மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வீட்டுமனைப்பட்டா
வத்திராயிருப்பு தாலுகா தெற்கு கோட்டையூர் கிராமத்தில் 110 ஆதிதிராவிட சமுதாயத்தினருக்கு கடந்த 2010-ம் ஆண்டு இலவச பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இடத்தை அளந்து கொடுக்காமல் உள்ளதால் மேலும் தாமதிக்காமல் நிலத்தை அளந்து கொடுக்க வேண்டுமென கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை தாலுகா ஜெகவீரம்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம விவசாயிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.