கூரியர் நிறுவன ஊழியர்விஷம் குடித்து தற்கொலை


கூரியர் நிறுவன ஊழியர்விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:56 PM IST)
t-max-icont-min-icon
கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மனைவியின் முதலாமாண்டு நினைவு தினத்தில் கூரியர் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கூரியர் நிறுவன ஊழியர்

சுசீந்திரம் அருகே உள்ள தேவகுளம் பகுதியை சேர்ந்தவர் தம்பி கண்ணன் (வயது 52), கூரியர் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ஜூலியட் கில்டா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நாகர்கோவில் ராணித்தோட்டம் வடக்கு தெரு பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தம்பி கண்ணன் மனைவி மற்றும் மகன், மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலியட் கில்டா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தம்பி கண்ணன் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறி புலம்பி வந்தார். மேலும் தான் மனைவி சென்ற இடத்திற்கே சென்றுவிட வேண்டும் எனவும் அடிக்கடி கூறி வந்தார்.

நினைவு தினத்தன்று தற்கொலை

இந்த நிலையில் நேற்று மனைவி ஜூலியட் கில்டாவின் முதலாமாண்டு நி்னைவு தினம் ஆகும். இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். இதற்காக நேற்றுமுன்தினம் உறவினர்கள் மற்றும் தம்பி கண்ணனின் மகன், மகள் ஆகியோர் வீட்டில் இருந்தனர். தம்பி கண்ணன் வேலையை முடித்துவிட்டு நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். ஆனால் அவர் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் தம்பி கண்ணன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனே உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவியின் முதலாமாண்டு நினைவு தினத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story