விவசாயிகளுக்கு ரூ.29 லட்சம் இழப்பீடு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


விவசாயிகளுக்கு ரூ.29 லட்சம் இழப்பீடு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை பகுதியில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் உரிய இழப்பீடு கிடைக்காத 19 விவசாயிகளுக்கு ரூ.29 லட்சம் இழப்பீடு வழங்க சிவகங்கை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

சிவகங்கை

சிவகங்கை,

தேவகோட்டை பகுதியில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் உரிய இழப்பீடு கிடைக்காத 19 விவசாயிகளுக்கு ரூ.29 லட்சம் இழப்பீடு வழங்க சிவகங்கை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

விவசாயம் பொய்த்து போனதால்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவை சேர்ந்த சருகனி, மாவிடுதி கோட்டை, நாரணமங்கலம், இளங்குடி, பாவனக்கோட்டை, கண்ணங்குடி, பொன்னழிகோட்டை, பூசலாக்குடி, திருமண வயல், தென்னீர் வயல், தலக்காவயல், அணுக்கணேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2016-2017-ம் ஆண்டில் பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். இவர்கள் உரிய காலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலமாக காப்பீட்டு தொகையை இந்த மாவட்டத்தின் காப்பீட்டு நிறுவனமான அப்போது இருந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செலுத்தினார்கள்.

இந்த பகுதிகளில் அந்த ஆண்டு விவசாயம் பொய்த்து போனது. இதனால் உரிய மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி இன்சூரன்ஸ் கம்பெனியிடம் விண்ணப்பித்தனர். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் காப்பீட்டு தொகையை வழங்கவில்லை.

இதனால் அந்த பகுதி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட தங்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க கோரி பலமுறை விண்ணப்பித்தனர். இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிவகங்கையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பயிர் காப்பீட்டு தொகை

வழக்கை விசாரணை செய்த நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் பாலசுப்ரமணியம், உறுப்பினர்கள் குட்வின் சாலமோன் ராஜ், மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் வழக்கு தொடர்ந்த 19 விவசாயிகளுக்கும் விவசாயம் பொய்த்து உரிய மகசூல் கிடைக்காமல் பாதிக்கப்பட்டதால் காப்பீட்டு நிறுவனம் அவர்களுக்கு ரூ.29 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும், தொகையை செலுத்தும் வரை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியும் மற்றும் நஷ்டஈடாக ரூ.95 ஆயிரமும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story