சட்ட விரோதமாக லாரி பறிமுதல்: உரிமையாளருக்கு ரூ.20¾ லட்சம் இழப்பீடு-நிதி நிறுவனத்துக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


சட்ட விரோதமாக லாரி பறிமுதல்: உரிமையாளருக்கு ரூ.20¾ லட்சம் இழப்பீடு-நிதி நிறுவனத்துக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

சட்ட விரோதமாக லாரியை பறிமுதல் செய்த வழக்கில் அதன் உரிமையாளருக்கு நிதி நிறுவனம் ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

லாரி பறிமுதல்

நாமக்கல்லில் மோகனூர் சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் (வயது 43). இவர் கடந்த 2018-ம் ஆண்டு சொந்த தொழில் செய்வதற்காக ரூ.28 லட்சத்து 25 ஆயிரத்தை தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனாக பெற்று, லாரி ஒன்றை வாங்கினார். ஒவ்வொரு மாதமும் கடனுக்கான தொகையை செலுத்தி வந்த போதும், எந்தவித காரணமும் இல்லாமல் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லாரியை நிதி நிறுவனம் பறிமுதல் செய்தது. இந்த பிரச்சினை குறித்து தங்கவேல் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில் லாரியை பறிமுதல் செய்து கொண்டதால் ஏற்பட்ட இழப்புக்கு ரூ.23 லட்சம் நிவாரணமும், நிதி நிறுவனத்தின் செயல்களால் ஏற்பட்ட சிரமங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என்று தங்கவேல் கேட்டிருந்தார்.

தீர்ப்பு

இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் வழங்கிய தீர்ப்பு வழங்கினார்.

அதில் கடன் பெற்றவர் கடனை செலுத்த தவறினால் அறிவிப்பு கொடுத்து சட்ட விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை பறிமுதல் செய்யாமல், சட்டவிரோதமாக வாகனத்தை நிதி நிறுவனம் பறிமுதல் செய்து உள்ளதும், கடந்த 2018-ம் ஆண்டில் ரூ.30 லட்சம் மதிப்புடைய லாரியை 2 ஆண்டுகள் கழித்து ரூ.7 லட்சத்து 60 ஆயிரத்துக்கு நிதி நிறுவனம் விற்பனை செய்து உள்ளதும் வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்க உத்தரவு

இவ்வாறு குறைவான விலைக்கு லாரி விற்கப்பட்டு உள்ளது என்பதை பார்க்கும்போது, நிதி நிறுவனம் தீய லாபம் அடைவதற்காக செயல்பட்டு உள்ளது என்பதும், தவறான முறையில் வாகனம் விற்கப்பட்ட பின்னர் பெயர் மாற்றம் செய்யப்படாமலும், இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாமலும் வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதும் வழக்கில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிதி நிறுவனம் இழப்பீடாக ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்தை 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணம் வழங்கப்படும் வரை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

1 More update

Next Story