கோர்ட் அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஆம்னி பஸ்களுக்கு பறந்த எச்சரிக்கை


கோர்ட் அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஆம்னி  பஸ்களுக்கு  பறந்த எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2024 11:20 AM GMT (Updated: 13 Feb 2024 11:45 AM GMT)

ஐகோர்ட்டின் உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகள் ஏற்றவும் இறக்கவும் கோர்ட் அனுமதித்துள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்துதான் புறப்பட்டு செல்லும் என்று கடந்த மாதம் போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், "கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்த பின்னர், ஆம்னி பஸ்களுக்கும் முடிச்சூரில் பணிமனை மாற்றப்பட்ட பின்னர், கோயம்பேட்டிலிருந்து பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முடிவுக்கு வந்துவிடும். மேலும் கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ்கள் பணிமனைகள் பயணிகள் வசதிகளுக்காக தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கலாம்.

அதேபோல் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை கண்டிப்பாக ஏற்ற வேண்டும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்ற வேண்டும். இறக்கியும் விட வேண்டும். ஆன்லைனிலும் மொபைல் ஆப்பிலும் பயணிகளை போரூர், சூரப்பட்டு தவிர வேறு எங்கும் ஏற்றவோ இறக்கவோ மாட்டாது என குறிப்பிட வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த இடைக்கால உத்தரவு தொடர வேண்டும்" என்று உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு பிறகு சென்னை கோயம்பேட்டில் பணிமனைகள் வைத்திருக்கும் தனியார் ஆம்னி பஸ்கள், அங்கிருந்தே பயணிகளை ஏற்றி செல்கின்றன. அதேபோல எழும்பூர், ரெட் ஹில்ஸ் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி வருகின்றன. ஒவ்வொரு பஸ்சும் ஒவ்வொரு விதமாக பிக் அப் மற்றும் டிராப்பிங் பாயிண்ட் வைத்திருப்பதாக கூறும் பயணிகள் இதனால் குழப்பம் ஏற்படுவதாகவும் கூறினர்.

இந்த நிலையில் விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை ஆணையர் கூறியுள்ளார். ஆம்னி பஸ்கள் தங்களது பணிமனைகளில் பயணிகளை ஏற்றுவதையும், இறக்குவதையும் தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஐகோர்ட்டின் உத்தரவு தவறாக புரிந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள போக்குவரத்து ஆணையர் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகள் ஏற்றவும் இறக்கவும் ஐகோர்ட் அனுமதித்துள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார். இது போன்ற விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.


Next Story