விபத்தில் சிறுவன் சாவு: மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சித்தப்பாவுக்கு 2 ஆண்டுகள் சிறை
விபத்தில் சிறுவன் இறந்தார். இதுதொடர்பான வழக்கில் சிறுவனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற அவனுடைய சித்தப்பாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
விபத்தில் சிறுவன் இறந்தார். இதுதொடர்பான வழக்கில் சிறுவனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற அவனுடைய சித்தப்பாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுவன் சாவு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகன் ஹிருத்திக் (வயது3). கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம், வடுவூர்தென்பாதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த சிறுவன் ஹிருத்திக்கை அவருடைய சித்தப்பா கோகுல் (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது நெல் மூட்டை ஏற்றி சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்ற போது நடந்த விபத்தில் சிறுவன் ஹிருத்திக் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தான்.
சிறை தண்டனை
இதுகுறித்து வடுவூர் போலீசார் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பான வழக்கு மன்னார்குடி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி அமீர்தீன் இன்று தீர்ப்பு கூறினார்.
அப்போது கவனக்குறைவாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சிறுவன் ஹிருத்திக் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த அவனுடைய சித்தப்பா கோகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.