விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மணல் அள்ள தடை கோரி வழக்கில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கணேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம் குரண்டி கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தில் சவடு மண் அள்ளுவதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட பகுதியைத்தாண்டி, விதிகளை மீறி மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கடும் அவதிப்படும் நிலை ஏற்படும். எனவே குரண்டி கிராமத்தில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். சட்டவிரோதமாக மணல் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரர் புகாரை விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசீலித்து 8 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.