நீர்நிலைகளை ஆக்கிரமித்து சமத்துவபுரம் அமைத்ததாக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்- ஐகோர்ட்டு உத்தரவு
நீர்நிலைகளை ஆக்கிரமித்து சமத்துவபுரம் அமைத்ததாக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து சமத்துவபுரம் அமைத்ததாக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சமத்துவபுரம்
திருச்சி மாவட்டம், காட்டுக்குளத்தைச் சேர்ந்த தனபால் பெருமாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
எங்கள் கிராமத்தில் கடந்த 2010-11-ம் ஆண்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சமத்துவபுரம் அமைப்பதற்காக பாப்பநாயக்கன்குளத்தை ஆக்கிரமித்து 20-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் உள்ள ஓடையும் அழிக்கப்பட்டுள்ளது. 100 வீடுகளும் முறையாக அளவீடு செய்து உட்பிரிவு செய்யப்படவில்லை. எனவே, பாப்பநாயக்கன்குளத்திற்கான ஓடை மற்றும் குளத்தை ஆய்வு செய்ய வேண்டும். வீடுகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
தள்ளுபடி
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, 2010-11-ல் கட்டுமானப் பணிகள் முடிந்தது. அனைத்து சமுதாயத்தினரையும் கொண்ட பயனாளிகள் தேர்வு முடிந்து உள்ளது. 12 ஆண்டுக்கு பிறகு விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஆதாரமின்றி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.