கள்ளுக்கு அனுமதி வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் மனுவை பரிசீலிக்க வேண்டும் - போலீஸ் கமிஷ்னருக்கு ஐகோர்ட்டு உத்தரவு


கள்ளுக்கு அனுமதி வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் மனுவை பரிசீலிக்க வேண்டும் - போலீஸ் கமிஷ்னருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

கள்ளுக்கு அனுமதி வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் மனுவை போலீஸ் கமிஷ்னர் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பனை, தென்னை மற்றும் பேரீச்சம்பழ மரங்களில் இருந்து இயற்கையான முறையில் கள் என்ற பானம் இறக்கி குடிக்கும் பாரம்பரியம் பழக்கம் உள்ளது.

ஆனால், இந்த கள்ளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு, அதற்கு பதில் வெளிநாட்டு இந்திய மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. செயற்கையான, ரசாயன முறையில் தயாரிக்கப்படும் இந்த மதுவகையினால் மனித குலத்துக்கு பேராபத்து ஏற்படுகிறது.

இந்த வகை மதுபானங்கள் குடிப்பதால், கல்லீரல் செயல் இழப்பு, கல்லீரல் புற்றுநோய், நரம்பு தளர்ச்சி, மூளைக்கு செல்லும் நரம்பு பாதிப்பு, சுயநினைவு இழப்பு, ஜீரனசக்தி பாதிப்பு, உடலுறவில் பிரச்சினை, ஆண்மைகுறைவு, நீரழிவு நோய் என்று ஏராளமான பாதிப்புகள் வருகின்றன.

ஆனால், இயற்கையாக கிடைக்கும் கள்ளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய சர்க்கரை, புரதம், கார்போ ஹைட்ரேட், அமினோ அமிலம், வைட்டமின் சி, பி 1, பி 2, பி 3, பி 6, ஈஸ்ட், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு சத்து ஆகியவை கிடைக்கிறது. இதனால், கள்ளை மக்கள் விரும்புகின்றனர்.

அதனால், கள்ளுக்கு அனுமதி வழங்கி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் பரிசீலிக்க வில்லை. எனவே, இந்த கோரிக்கை வலியுறுத்தி கடற்கரைச்சாலையில் உள்ள காமராஜர் சிலை முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தேன்.

ஆனால், என் கோரிக்கை நிராகரித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் விஜேந்திரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுதாரர் உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு மீண்டும் மனு கொடுக்க வேண்டும். அந்த மனுவை போலீஸ் கமிஷனர் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story