உறவினர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் மடத்துக்குளம் கோர்ட்டில் சரண்


உறவினர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் மடத்துக்குளம் கோர்ட்டில் சரண்
x
திருப்பூர்


ஆனைமலையை அடுத்த தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 33). இவருக்கு சத்யா என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சத்யாவின் அக்கா கவிதாவுக்கு உன்னிகிருஷ்ணன் (36) என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் குடும்பத்தகராறால் கவிதா தன் கணவர் உன்னிகிருஷ்ணனைப் பிரிந்து அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த விஷயத்தில் உன்னிகிருஷ்ணனுக்கும், அவருடைய சகலையான சசிகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்த சசிகுமாருக்கும் உன்னிகிருஷ்ணனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் கீழே விழுந்த உன்னிகிருஷ்ணனின் தலையில் சசிகுமார் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த உன்னிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்து சசிகுமார் தப்பியுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார் தப்பி ஓடிய சசிகுமாரை வலை வீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று சசிகுமார் மடத்துக்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை விசாரித்த நீதிபதி சிறையிலடைக்க உத்தரவிட்டார்.


Next Story