கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சந்துரு பேசினார்.
கருத்தரங்கம்
காட்பாடியில் உள்ள வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் 'உலக மயமாக்கும் காலத்தில் மனித உரிமை பாதுகாப்பு' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ஜெயகவுரி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கோர்ட்டுகள் 365 நாட்களும் செயல்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் சரியான நீதியை பெற்றுத்தர முடியும்.
சமூக நீதியை நிலை நாட்டுவதில்...
நூலகங்கள் மிக முக்கியமானது. அனைத்து விழாக்களிலும் சில சம்பிரதாயங்கள் நடைபெறுகிறது. அதை தவிர்த்து புத்தகங்களை வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கு நல்லதொரு அறிவை கொடுக்க முடியும். அது மட்டுமல்ல, மாணவர்கள் தங்கள் கடமையை செய்ய ஒருபோதும் தயங்கக் கூடாது. சமூக நீதியை நிலை நாட்டுவதில் வக்கீல்களின் பங்கு மிக முக்கியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் முஜாஹித் உல் இஸ்லாம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மனித உரிமை பற்றியும், அதன் பாதுகாப்பு பற்றியும் பேசினார். வக்கீல்கள் ஜெயஸ்ரீ, கவிதா ஆகியோரும் பேசினர்.
கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சதீஷ் ராயன் நன்றி கூறினார். கருத்தரங்கை ரம்யா தொகுத்து வழங்கினார்.