'அனல்மின் நிலையங்களை மூடுவது குறித்த ஐகோர்ட்டின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்
ஐகோர்ட்டின் கருத்து நம்பிக்கையையும், வலிமையையும் அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அனல் மின்நிலையங்களை மூடுவது குறித்த ஐகோர்ட்டின் விருப்பத்தை மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"அனல்மின் நிலையங்களும், அணுமின் நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த கோர்ட்டும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். காவிரி ஆறு மீது சூரியஒளி மின் தகடுகளை அமைத்தால் என்.எல்.சி அளவுக்கு மின்சாரத்தை தயாரித்து விட முடியும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதியரசர் தண்டபாணி கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கடுமையான ஒடுக்குமுறைகளுக்கும், நெருக்கடிக்கும் இடையே இயற்கையையும், சுற்றுச்சூழலையும் காக்க போராடி வரும் எங்களைப் போன்றவர்களுக்கு ஐகோர்ட்டின் கருத்து நம்பிக்கையையும், வலிமையையும் அளிக்கிறது. அனல்மின் நிலையங்கள் மூடப்படுவது குறித்த சென்னை ஐகோர்ட்டின் விருப்பத்தை மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.