தொடர் மழையால் வளர்ந்த புற்கள்; நான்கு வழிச்சாலையின் நடுவே மேயும் மாடுகள்
திண்டுக்கல்லில் நான்கு வழிச்சாலையின் நடுவே தொடர் மழையால் வளர்ந்த புற்களை மேயும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளது.
திண்டுக்கல்லில் நான்கு வழிச்சாலையின் நடுவே தொடர் மழையால் வளர்ந்த புற்களை மேயும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளது.
நான்கு வழிச்சாலை நடுவில்...
கன்னியாகுமாி முதல் காஷ்மீர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் முக்கிய நகரங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. அதேநேரம் தேவையில்லாமல் ஒரு நகரத்துக்குள் செல்லாமல் புறநகர் வழியாகவே சென்றுவிடலாம். இதனால் சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்களின் தொல்லை நகரங்களில் பெருமளவு குறைந்து இருக்கிறது.
இந்த நான்கு வழிச்சாலையில் இரவில் எதிர் எதிரே வரும் வாகனங்களின் விளக்குகளின் அதிக ஒளியால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்கவே நான்கு வழிச்சாலையின் நடுவே அரளி உள்ளிட்ட செடிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த செடிகள், விளக்கு ஒளியை மறைப்பதால் டிரைவர்கள் சிரமமின்றி வாகனங்களை ஓட்டி செல்வதற்கு வசதியாக இருக்கிறது.
மழையால் வளர்ந்த புற்கள்
மழை பெய்யாத கோடைகாலத்தில் செடிகள் காய்ந்து போகாமல் தடுக்க லாரி, டிராக்டர்களில் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றப்படும். அதன்படி திண்டுக்கல்லில் திண்டுக்கல்-மதுரை, திண்டுக்கல்-திருச்சி, திண்டுக்கல்-சேலம் நான்கு வழிச்சாலைகளின் நடுவே இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை பார்க்கலாம். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ச்சியாக மழை பெய்தது.
மேலும் மழை பெய்யாத நாட்களிலும் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதோடு, இரவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் நான்கு வழிச்சாலையில் செடிகளுக்கு அருகே புற்கள் முளைத்து பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. இது வாகன ஓட்டிகள் மட்டுமின்றி வாகனங்களில் செல்வோரின் கண்களுக்கும் விருந்தளிக்கிறது.
மாடுகள் மேய்கின்றன
இதற்கிடையே பசும் புற்களை பார்த்ததும் மாடுகள், சாலையின் நடுவே வந்து மேய தொடங்கி விடுகின்றன. இருபுறமும் மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்வதை பார்த்து சிறிதும் அச்சமின்றி சாலையின் நடுவே புற்களை மாடுகள் மேய்கின்றன. ஒருசிலர் ஆபத்தை உணராமல் மாடுகளை சாலையின் நடுவே இருக்கும் அரளி செடியில் கட்டி போடுகின்றனர். அந்த மாடுகளும் புற்களை மேய்ந்த பின்னர், அங்கேயே படுத்து கொள்கின்றன.
இதுபோன்ற காட்சிகளை திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, பிள்ளையார்நத்தம், தோமையார்புரம், கொடைரோடு உள்பட பல பகுதிகளில் பார்க்க முடிகிறது. ஏதேனும் ஒரு சூழலில் மாடுகள் மிரண்டு சாலைக்கு வந்துவிட்டால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. இதை மாடு வளர்ப்போர் உணர வேண்டும். இதேபோல் விபத்து ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.