பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.65 ஆயிரத்துக்கு காங்கயம் இன மயிலை பசுமாடு விற்பனை


பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.65 ஆயிரத்துக்கு காங்கயம் இன மயிலை பசுமாடு விற்பனை
x
தினத்தந்தி 2 July 2023 10:03 PM IST (Updated: 3 July 2023 2:20 PM IST)
t-max-icont-min-icon

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.65 ஆயிரத்துக்கு காங்கயம் இன மயிலை பசுமாடு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்

பழையகோட்டை மாட்டுத்தாவணி

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும்.

இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாட்டு சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

பசுமாடுகள் விற்பனை

மேலும் இந்த காங்கயம் இன கால்நடை விற்பனை சந்தையில் நேற்று காங்கயம் இன பசுமாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் அதிக ஆர்வத்துடன் நேரில் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

இதனால் இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் உள்ள 63 காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 40 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.

ரூ.15 லட்சத்துக்கு விற்பனை

இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கயம் இன செவலை கிடாரி கன்றுடன் மயிலை பசுமாடு ரூ.65 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.44 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.15 லட்சத்திற்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் நேற்று நடைபெற்ற காங்கயம் இன பசுமாடுகள் விற்பனை சந்தையில் திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story