மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி


மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி
x

தோகைமலை அருகே மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.

கரூர்

மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கம்பளியம்பட்டியில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு கோலகம்பளி நாயக்கர் மந்தையில் அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மாலையில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த 14 மந்தையர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அழைத்து வரப்பட்ட அனைத்து மாடுகளுக்கு புன்னியதீர்த்தம் தெளிக்கப்பட்டு தாரை, தப்பட்டை முழக்க கோலகம்பளி நாயக்கர் மந்தையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன.

எலுமிச்சைப்பழம் பரிசு

அங்கு எல்லைச்சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மாடுகளுக்கு புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுகள் கோலகம்பளி நாயக்கர் மந்தையில் வைக்கப்பட்டிருந்த எல்லைக்கோட்டை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடியது. அப்போது அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதில், கரூர் மாவட்டம், ஆர்.டி.மலை வாளியம்பட்டி மந்தை மாடு முதலாவதாகவும், புதுக்கோட்டை மாவட்டம், சேமங்கலம் அய்யாசாமி மந்தை மாடு 2-வதாக ஓடி வந்து வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற மாடுகளின் மீது சமூக வழக்கப்படி 3 கன்னிப்பெண்கள் கையில் வைத்திருந்த மஞ்சப்பொடி தூவப்பட்டு எலுமிச்சைப்பழம் பரிசாக வழங்கப்பட்டன.

தேவராட்டம்

பின்னர் 3 கன்னிப்பெண்களும் எல்லை கோட்டில் இருந்து கோவிலுக்கு தேவராட்டத்துடன் அழைத்து செல்லப்பட்டனர்.

இதில் ஊர்நாயக்கர், மந்தா நாயக்கர், திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story