மோகனூர் பகுதியில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி


மோகனூர் பகுதியில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 Jan 2023 8:15 PM GMT (Updated: 18 Jan 2023 8:15 PM GMT)

மோகனூர் பகுதியில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.

நாமக்கல்

மோகனூர்:-

மோகனூர் பகுதியில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.

மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காப்பு கட்டிய மறுநாள் முதல் கோவில் மாடு, கோமாளி வேடம் அணிந்து ஒருவர் உறுமி மேளம் வாசித்து, ஊர் ஊராக சென்று வீட்டுக்குள் மாடுகளை விட்டு நன்கொடை வசூல் செய்கின்றனர். தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் ஊனாங்கல் பட்டி, வீரகாரன் கோவில் வளாகத்தில் மஞ்சள் தூள், ஆவாரம்பூ, கரும்பு, வெற்றிலை பாக்கு கொண்டு எல்லைக்கோடு அமைக்கின்றனர்.

கோவில் மாடுகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து விரட்டுகின்றனர். அந்த மாடுகள் ஓடிவந்து எல்லைக்கோட்டை தாண்டுவதை பூ தாண்டும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.

மோகனூர் ஒன்றியம் ஊனாங்கல்பட்டி, மல்லுமாச்சம்பட்டி, சின்னப்பெத்தாம்பட்டி, குன்னத்தூர், என்.புதுப்பட்டி ஊராட்சி, மேலப்பட்டி, பகுதியை சேர்ந்த 5 கோவில் மாடுகள் பங்கேற்றன. மூன்று முறை மாடு பூ தாண்டும் போட்டி நடந்தது. முடிவில் மல்லுமாச்சம்பட்டியை சேர்ந்த சாமி மாடு வெற்றி பெற்றது. அவ்வூர் கோமாளி வேடம் அணிந்தவரை குதிரை மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

பெரியநாயக்கனூர்

வேலகவுண்டம்பட்டி அருகே அப்பநாயக்கனூர் ஊஞ்சதோப்பு பெரிய நாயக்கனூர் கோவிலில் மாடுகள் பூ தாண்டும் போட்டி நேற்று நடந்தது. போட்டியில் வேப்பமரத்தூர், அப்பநாயக்கனூர், காளிநாயக்கனூர் கிராமங்களில் இருந்து 3 சுவாமி காளை மாடுகள் கலந்து கொண்டன. கோவில் முன்புள்ள பகுதியில் சுமார் 100 அடி தூரத்திற்கு சுவாமி காளைகளை ஓட விடும் போட்டி நடந்தது.

வேப்பமரத்தூரை சேர்ந்த சுவாமி காளைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. பூ தாண்டுதல் போட்டியை காண சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story