பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தம்


பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:30 AM IST (Updated: 23 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாதம் பிறந்ததால் பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கார்த்திகை மாதம் பிறந்ததால் பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது.

மாட்டு சந்தை

பொள்ளாச்சியில் மாட்டு சந்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறும். சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு வரும் மாடுகளை உள்ளுர் விவசாயிகள், வியாபாரிகளும் வாங்கி செல்வார்கள்.

இதை தவிர கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் மாட்டு சந்தை நடைபெற்றது. சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. இதற்கிடையில் கார்த்திகை மாதம் பிறந்ததால் விற்பனை மந்தமானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

விற்பனை மந்தம்

பொள்ளாச்சி சந்தையில் பெரும்பாலும் கேரளாவுக்கு இறைச்சி தேவைக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் கார்த்திகை மாதம் பக்தர்கள் மாலை அணிந்து விரம் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு செல்வார்கள். இதன் காரணமாக சந்தைக்கு கேரள வியாபாரிகள் வருகை குறைந்து இருந்தது. இதனால் வரத்து இருந்தும் விற்பனை மந்தமானது.

சந்தைக்கு 1000-த்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், காங்கயம் காளை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், பசு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

இவ்வாறு அவர் கூறினார்கள்.


Next Story