சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்


சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்
x

நத்தம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடிவீரர்கள் மல்லுக்கட்டினர். காளைகள் முட்டியதில் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில், சங்கரன்பாறையில் பாலமுருகன் கோவில் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழாவையொட்டி சங்கரன்பாறையில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.

இதனை திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், நத்தம் தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு அரசு மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் கால்நடை மருத்துவர்களும் காளைகளை பரிசோதனை செய்தனர்.

457 காளைகள்

5 சுற்றுகளாக ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 150 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இதேபோல் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 457 காளைகள் சீறிப்பாய்ந்தன.

மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்ட பிறகு மைதானத்துக்குள் இறங்க அனுமதிக்கப்பட்டனர். முதலில், வாடிவாசலில் இருந்து ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் வாடிவாசலில் இருந்து களத்துக்குள் இறங்கின.

மல்லுக்கட்டிய வீரர்கள்

ஜல்லிக்கட்டு காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். சீறிப்பாய்ந்து வந்த சில முரட்டு காளைகளை கண்டு மாடுபிடி வீரர்கள் மிரண்டு ஓடினர். 'தில் இருந்தால் என்னை பிடித்து பார்' என்று திமிலை உயர்த்தி திமிராய் சில காளைகள் களத்தில் நின்று விளையாடின.

பெரும்பாலான காளைகளை அடக்கி, தங்களது பலத்தை களத்தில் நிரூபித்து பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர் காளையர்கள். அதேநேரத்தில் சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் போக்கு காட்டின.

அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு வெள்ளிக்காசுகள், கட்டில், பீரோ, குக்கர், மின்விசிறி, நாற்காலி, வேட்டி, டைனிங் டேபிள், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

27 பேர் படுகாயம்

சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் நத்தம் உலுப்பக்குடியை சேர்ந்த சங்கரபாண்டியன் (வயது 21), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அருண்பாண்டி (24), மதுரையை சேர்ந்த நாகராஜ் (22), அலங்காநல்லூரை சேர்ந்த சரவணன் (28), கொட்டாம்பட்டியை சேர்ந்த கணபதி (22) உள்பட 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நத்தம் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.

பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி ஆகியோர் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை சொறிப்பாறைபட்டி, சங்கரன்பாறை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story