ெபாள்ளாச்சி சந்தையில் ரூ.5 கோடிக்கு மாடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ரூ.5 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது. காங்கேயம் காளை ஒன்று ரூ.70 ஆயிரத்துக்கு விலைபோனது.
பொள்ளாச்சி
பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ரூ.5 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது. காங்கேயம் காளை ஒன்று ரூ.70 ஆயிரத்துக்கு விலைபோனது.
மாடுகள் விற்பனை விறுவிறுப்பு
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாட்டு சந்தை நடைபெற்றது. சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் பக்ரீத் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதால் மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மேலும் சந்தையில் வியாபாரிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆர்வமுடன் மாடுகளை வியாபாரிகள் வாங்கி சென்றனர். அதிகபட்சமாக காங்கேயம் காளை ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை யானது.
இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-
1500 வியாபாரிகள் வருகை
பொள்ளாச்சி சந்தைக்கு வழக்கமான நாட்களில் 2 ஆயிரம் மாடுகள் வரை கொண்டு வரப்படும். ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இதற்கிடையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் கடந்த வாரம் 3,500 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று கோவை மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் 4 ஆயிரம் மாடுகள் வரை கொண்டு வரப்பட்டன. தமிழகம், கேரளாவில் இருந்து சுமார் 1500 வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கு வந்தனர். இதனால் சந்தையில் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
காங்கேயம் காளை ரூ.70 ஆயிரம்
இதில் காங்கேயம் காளை ரூ.65 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், காங்கேயம் பசு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், மொரா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. நேற்று மட்டும் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. விற்பனை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.