சி.பா.ஆதித்தனார் 118-வது பிறந்தநாள்: இன்று அரசு விழாவாக கொண்டாட்டம்


சி.பா.ஆதித்தனார் 118-வது பிறந்தநாள்: இன்று அரசு விழாவாக கொண்டாட்டம்
x

சி.பா.ஆதித்தனார் 118-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

சென்னை,

தமிழ் இதழியலின் முன்னோடியும், 'தமிழர் தந்தை' என்று எல்லோராலும் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு இன்று (27-09-2022) காலை 9 மணி அளவில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளார்கள்.

சி.பா.ஆதித்தனார் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்கிற கிராமத்தில் 1905-ம் ஆண்டு பிறந்தார். மிகவும் செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டில் சட்டப்படிப்பு முடித்து, 'பாரிஸ்டர்' பட்டம் பெற்றிருந்தாலும், சமுதாயப் பணிகளிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட பத்திரிகையின் பங்கே முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்திருந்தார்.

கல்லூரியில் படிக்கின்ற நாட்களிலேயே சிறு தொழில்கள் செய்து முன்னேறுவது குறித்து பல கட்டுரைகளும், நூல்களும் எழுதி உள்ளதோடு, தமிழ் இதழியலில் அவர் கொண்டிருந்த தணியாத தாகத்தின் காரணமாக, 1942-ம் ஆண்டு முதன் முதலாக 'மதுரை முரசு' என்ற வாரம் இருமுறை இதழையும், பின்னர் 'தமிழன்' என்ற வார இதழையும் தொடங்கினார்.

யாருக்கும் அஞ்சாமல் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும் என்கிற கொள்கைப்பிடிப்பின் காரணமாக, இவரது பத்திரிகையை ஆங்கிலேய அரசு தடை செய்தும்கூட, தன் கொள்கையை மாற்றிக்கொள்ளாதவர். 1942-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் 'தினத்தந்தி' நாளிதழை வெளியிட்டார். 1947-ம் ஆண்டில் 'தினத்தாள்', 'தினத்தூது' ஆகிய பத்திரிகைகளையும் தொடங்கினார்.

எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப்படங்கள் உள்ளிட்ட யுக்திகளை கையாண்டார். 'ஒரு படம் ஆயிரம் சொல்லுக்கு சமம்' என்ற சீனப்பழமொழிக்கேற்ப, தனது நாளிதழில் ஏராளமான படங்களுடன் செய்திகளை வெளியிட்டு தனது தனித்துவத்தால் தமிழ் இதழியல் துறையில் உச்சம் தொட்டுள்ளார் என்றால் அது மிகையில்லை.

தமிழரசு கட்சி, நாம் தமிழர் இயக்கங்களை தொடங்கி தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். 1942-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் ஆகவும், 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1967-ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றிருந்த காலத்தில் சபாநாயகராக பணியாற்றியபோது ஆங்கிலத்தில் இருந்த சட்டப்பேரவை விதிகளை தமிழில் மொழிபெயர்த்தவர் என்கின்ற பெருமைக்குரியவர்.

பின்னர் கருணாநிதி முதல்-அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 1969-ல் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராகவும் திறம்பட பணியாற்றினார். தமிழ் மீதும், தமிழர் மீதும் மாறாத பற்று கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டதனால், அனைவராலும் "தமிழர் தந்தை" என அன்போடு அழைக்கப்படுகிறார்.

1981-ம் ஆண்டு மே 24-ந் தேதி தனது 76-வது வயதில் இயற்கை எய்தினார். அன்னாருடைய அருமை பெருமைகளை போற்றுகின்ற வகையில் அவரின் பிறந்த நாளானது அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


Next Story