அன்புஜோதி ஆசிரமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை


அன்புஜோதி ஆசிரமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின்போது ரத்தக்கறை படிந்த பாய்கள், இரும்புச்சங்கிலி, மூங்கில் பிரம்புகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகவும், ஆசிரமத்தில் இருந்தவர்கள் காணாமல் போனது தொடர்பாகவும் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் ஆசிரம பணியாளர்கள் 7 பேர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

ஆசிரம விவகாரத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் பல்வேறு சர்ச்சைக்குள்ளான தகவல்கள் வெளியாகி பூதாகரமாகி வெடித்து வருவதால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, குமார், கார்த்திகேயன், தனலட்சுமி மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரை கொண்ட சிறப்புக்குழுவினர் நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கினர்.

ஆசிரமத்தில் அதிரடி சோதனை

இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் தலைமையிலான 20 பேர் கொண்ட போலீசார் நேற்று காலை 11.30 மணியளவில் அன்புஜோதி ஆசிரமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அதிரடி சோதனை நடத்தினர். இவர்களுடன் விழுப்புரம் மண்டல தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் சண்முகம் தலைமையிலான குழுவினரும் இணைந்து சோதனை நடத்தி தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆசிரமத்தில் அலுவலர்கள், பணியாளர்கள் தங்கும் அறை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்கும் அறைகள், சமையல் அறை, உணவு பரிமாறும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டதோடு அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் தங்கும் அறைகளில் மின்விளக்கு வசதி, மின்விசிறி வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

2½ மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோரை கட்டிப்போட பயன்படுத்தப்பட்ட இரும்புச்சங்கிலிகள், அவர்களை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ய பயன்படுத்தப்பட்ட மூங்கில் பிரம்புகள், ரத்தக்கறை படிந்த பாய்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் உடுத்திய துணிமணிகள், 30-க்கும் மேற்பட்ட முத்திரைகள், மருந்துப்பொருட்கள் ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இவற்றை விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.


Next Story