சாட்சிகளை ஆஜர்படுத்துமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் சாட்சிகளை ஆஜர்படுத்துமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம்:
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப் புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.
சாட்சிகளை ஆஜர்படுத்த உத்தரவு
மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி புஷ்பராணி குறுக்கிட்டு, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் இவ்வழக்கு விசாரணை விரைவாக நடந்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டியதோடு கடந்த 5, 6 முறை நடைபெற்ற விசாரணையின்போது சாட்சிகள் யாரும் ஏன் ஆஜராகவில்லை என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் கட்டாயம் சாட்சிகளை ஆஜர்படுத்துமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.