கோடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஆய்வு


கோடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.  ஆய்வு
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து கோடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பங்களாவில் கொள்ளை நடந்த அறைகளை பார்வையிட்டார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து கோடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பங்களாவில் கொள்ளை நடந்த அறைகளை பார்வையிட்டார்.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு 24.4.2017-ந் தேதி எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை ் சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வழக்கை தீர விசாரித்து உண்மையை வெளியே கொண்டு வர கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மாத இறுதியில் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

டி.ஜி.பி. நேரில் ஆய்வு

இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், துணை சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் கோத்தகிரிக்கு வந்தனர். பின்னர் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகனை அழைத்துக் கொண்டு கோடநாடு எஸ்டேட் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில் ஊட்டி கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்தநிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் நேற்று மதியம் 12 மணிக்கு கோவைக்கு வந்தார். அங்கிருந்து 6 போலீஸ் வாகனங்களில், உயர் அதிகாரிகளுடன் மதியம் 1.15 மணிக்கு கோத்தகிரிக்கு வந்தார்.

பின்னர் லாங்வுட் சோலை விடுதிக்கு சென்று, கோடநாடு வழக்கு குறித்து அதிகாரிகளுடன் ½ மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் 2.15 மணிக்கு அதிகாரிகள் கோடநாடு புறப்பட்டு சென்றனர். கோடநாடு எஸ்டேட்டில் 7-வது நுழைவுவாயில் வழியாக போலீஸ் வாகனங்கள் எஸ்டேட்டிற்குள் அணிவகுத்து சென்றன. தொடர்ந்து எஸ்டேட் மேலாளரான நடராஜனை அதிகாரிகள் அழைத்துக் கொண்டு சென்றனர்.

கொள்ளை நடந்த அறைகள்

இதையடுத்து காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த இடம், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எஸ்டேட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 9 மற்றும் 10-வது நுழைவுவாயில்களை டி.ஜி.பி. ஷகில் அக்தர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து எஸ்டேட் பங்களாவிற்குள் சென்று, அங்கு கொள்ளை நடந்த அறைகளில் ஆய்வு மேற்கொண்டனர். 2 மணி நேரம் ஆய்வு மேற்கொண்ட பின் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மாலை 4.15 மணிக்கு கோத்தகிரி வழியாக திரும்பி சென்றனர்.

ஆய்வின் போது டி.ஜி.பி. ஷகில் அக்தருடன், பெண் அதிகாரி உள்பட மொத்தம் 6 அதிகாரிகள் உடனிருந்தனர். கோடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்ட பின்னர் 2-வது முறையாக போலீஸ் அதிகாரிகள் கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கி உள்ளதால், வழக்கு மீண்டும் சூடுபிடித்து உள்ளது.



Next Story